அரசுப் பேருந்து மோதியதில் பாதிக்கப்பட்ட - இருவருக்கு ரூ.3.22 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு :

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.1.61 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக்கழக கோவை நிர்வாக இயக்குநருக்கு மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவாணி-கோவை சாலையில் கடந்த 2019 பிப்ரவரி 4-ம் தேதி பட்டுசாமி என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, கோவை போளுவாம்பட்டி அருகே உள்ள சந்தேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30), கணபதியைச் சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோர் பின்னிருக்கையில் அமர்ந்தவாறு பயணித்துள்ளனர். பழனி ஆண்டவர் மில் அருகே சென்றபோது எதிர்திசையில் துரைராஜ் என்பவர் ஓட்டிவந்த அரசுப் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், ஆனந்தராஜூக்கு நெஞ்சுப் பகுதியில் எலும்பு முறிவும், உடல் முழுவதும் காயங்களும் ஏற்பட்டன. கார்த்திக்குக்கு தலையில் எலும்பு முறிவும், உடல் முழுவதும் காயங்களும் ஏற்பட்டன. விபத்து நடந்தபோது, ஆனந்தராஜ் கட்டுமான தொழில் செய்து மாதம் ரூ.15 ஆயிரமும், கார்த்திக், சலூன் கடை வைத்து மாதம் ரூ.15 ஆயிரம் வருமானமும் ஈட்டிவந்துள்ளனர். விபத்தால் இவர்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. வருமானமும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே, தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிடக்கோரி இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பேருந்து ஓட்டுநரின் அதிவேகம், அஜாக்கிரதை, கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு ஏற்பட்ட வலி, வேதனை, வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடாக தலா ரூ.1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் அரசுப் போக்குவரத்துக்கழகம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்