மீட்புப் பணியை மேற்கொள்ள - பருவமழைக் காலத்தை முன்னிட்டு : தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர் :

பருவமழைக் காலத்தை முன்னிட்டு, மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, கோவை மாவட்டத்தில் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக கோவையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, வெள்ளப் பெருக்கின்போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கோவையில் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர், நிலைய அலுவலர்கள், முன்னணி தீயணைப்பாளர்கள், தீயணைப்பாளர்கள் என 280-க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், பருவமழையின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்புத்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில், ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், மரம் அறுக்கும் இயந்திரம், கயிறு, அயன் கட்டர் உட்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுசாமி கூறும்போது, ‘‘கோவை மேற்கு மண்டல தீயணைப்புத்துறையின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 9 மாவட்டங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் 13 நிலையங்கள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் பருவமழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பவானி ஆறு, பொள்ளாச்சியில் ஆற்றங்கரையோரம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெள்ள நீர் செல்லும் பாதைகளில் கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பைகளை போடக்கூடாது. மழை பற்றிய அறிவிப்புகளை வானொலி, தொலைக்காட்சி, மற்றும் செய்தித்தாள்களில் கவனமாக பார்வையிட வேண்டும். இடி, மின்னலின்போது கைபேசி பயன்படுத்த வேண்டாம் மேலும் மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் வதந்திகளை பரப்ப வேண்டாம்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்