தொடர் மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருச்செங்கோடு அருகே தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கொன்னையார், பருத்திப்பள்ளி கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. நீர் நிலைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனிடையே தொடர் மழையால் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட கொன்னையார், பருத்திப்பள்ளி இடையே மடையங்காட்டுப்புதூரில் திருமணி முத்தாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கொன்னையார், பருத்திப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பரமத்திவேலுர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரைப்பாலம் உள்ள பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார். எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.,): கொல்லிமலை செம்மேடு 54, மோகனூர் 24, நாமக்கல் 16, பரமத்தி வேலூர் 1 மி.மீ., மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago