பருவ மழை இடர்பாடுகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை : சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் பருவ மழையின்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை போக்க பொதுமக்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:

சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாக்கடை கால்வாய்கள், நீர்வழித் தடங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உபரிநீர் வெளியேறும் நீர்வழித்தடங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டு சாலை மற்றும் சாலையோரம் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும்.

மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனே சரிசெய்வதற்குத் தேவையான ஜேசிபி இயந்திரம், குப்போட்டோ, இட்டாச்சி, டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், மழைநீரை வெளியேற்றும் வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கூடுதலாக வாகனங்கள் தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகள், மாத்திரைகள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கை, டெங்கு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பருவ மழையின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தை 0427- 2212844 என்ற தொலைபேசி எண்ணிலும், மண்டலம் வாரியாக தொடர்பு கொள்ள சூரமங்கலம் மண்டலம் 0427-2387514, அஸ்தம்பட்டி 0427 2314646, அம்மாப்பேட்டை 0427-2263161, கொண்டலாம்பட்டி 0427 – 2216616 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்