குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழாவையொட்டி, மத்திய மண்டல காவல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் நவ.1 முதல் நவ.14 வரை குழந்தைகள் பாதுகாப்பு வாரங்களாக கடைபிடிக்க ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த 2 வாரங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று, ஆபத்து காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களான 100(காவல்), 181(ஒன் ஸ்டாப் சென்டர்), 1091(பெண்களுக்கான உதவி மையம்), 1098(குழந்தைகளுக்கான உதவி மையம்) ஆகியவை குறித்து எடுத்துக் கூறி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “நவ.1 முதல் 5-ம் தேதி வரை 1,601 கிராமங்களில் 64,539 வீடுகளில் பொதுமக்களைச் சந்தித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளோம். 1,465 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, 64,765 பேர் பங்கேற்றுள்ளனர். இப்பணியில் போலீஸாருடன் 1,883 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago