தீபாவளி விடுமுறையையொட்டி ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்து வருவதால் வருவாய் வசூல் அதிகரித்துள்ளது. இதனால் வனத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
ரங்கம் அருகே மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா கரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது, கரோனா பரவல் குறைந்ததால் அண்மையில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டாலும், வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனவே, பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில், பார்வையாளர்களின் கை அசைவுக்கேற்ப சிறகுகளை விரிக்கும் வகையில் சென்சார் மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரானிக் தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுதவிர இங்கு வரக்கூடியவர்களுக்கு இளநிலை ஆராய்ச்சியாளர்கள் அருண், அபிநயா, சந்தோஷினி உள்ளிட்டோர் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முயற்சிக்கு பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன்படி தீபாவளிக்கு மறுநாளான நேற்று முன்தினம் மட்டும் 1,840 பெரியவர்கள், 379 சிறுவர், சிறுமிகள் என 2,319 பேர் இங்கு வந்தனர். இவர்களிடமிருந்து நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், படகு பயணக் கட்டணம், திரையரங்க நுழைவுக் கட்டணம், பேட்டரி கார் மற்றும் குழந்தைகள் ரயில் உள்ளிட்டவை மூலம் ஒரே நாளில் ரூ.35,365 வசூலானது. அதேபோல 2-வது நாளாக நேற்று மாலை 4 மணி வரை வருகை தந்த 1,843 பேர் மூலம் ரூ.21,040 கட்டணம் வசூலானது. இதனால், வனத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘‘கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு நாளொன்றுக்கு 300- 400 பேர் வருவதே அரிதாக இருந்தது. எனவே, தீபாவளி பண்டிகை கால விடுமுறையையொட்டி பொதுமக்களை ஈர்ப்பதற்காக மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், வன சரகர் சரவணக்குமார் ஆகியோர் இங்கேயே முகாமிட்டு கூடுதல் வசதிகளை செய்து கொடுத்தனர். இதனால், பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருவாயும் அதிகரித்துள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago