திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகரில் மழைக்காலம் தொடங்கிவிட்டால் சாலைகளிலும், தெருக்களிலும் மாடுகள் சுற்றித்திரிவதும், அதனால் பல்வேறு விபத்துகள் நிகழ்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மாநகர சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிவது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மண்டலத்தில் சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், அந்தோணி, பாளையங்கோட்டை மண்டல சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள், தெருக்களில் திரிந்த மாடுகளைப் பிடித்து அருகன்குளம் கோசாலையில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டும் 13 மாடுகள், மற்ற மண்டலங்களில் தலா 10 மாடுகள் பிடிக்கப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago