வரும் 10-ம் தேதி முதல் 4 தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தி.மலை நகரின் வெளியே அமைக்கப்படும் 4 தற்காலிக பேருந்து நிலையங்கள் வரும் 10-ம் தேதி முதல் பத்து நாட்களுக்கு செயல்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் பா.முருகேஷ் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, நவம்பர் 7 முதல் 23-ம் தேதி வரை, வெளியூர் பக்தர்கள் அனைவரும், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 17-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொடியேற்றம் நடைபெறும் 10-ம் தேதியும் மற்றும் கோயில் 5-ம் பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெறும் 16-ம் தேதி காலை 6 மணி முதல்9 மணி வரை, கோயில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும், உள்ளூர் பக்தர்கள் (தி.மலை மாவட்டம்) 3 ஆயிரம் பேரும் என தினசரி 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். உள்ளூர் பக்தர்களுக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் காந்தி நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் 7 மற்றும் 8-ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக அனுமதிச்சீட்டு வழங்கப்படும். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனுமதிச் சீட்டு மற்றும் ஒருமுறை போடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி சான்று அல்லது 24 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றை கொண்டு வர வேண்டும்.

நவம்பர் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை. கோயில் உள்ளே விஐபிக்களின் வருகை கட்டுப்படுத்தப்படும். கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நகரின் வெளிவட்ட பாதையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்து, அங்கேயே தடுப்புகளை ஏற்படுத்தி, பக்தர்கள் வருவது தடுத்து நிறுத்தப்படும்.

மேலும், இந்தாண்டு 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு ஈசான்ய மைதானம், செங்கம் சாலை, காஞ்சி சாலை மற்றும் திருக்கோவிலூர் சாலையில் 4 தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து செயல்படுத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்