செய்யாறில் காவல் துறையை கண்டித்து - தமுமுகவின் ஒரு பிரிவினர் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

செய்யாறில் மண்டல செயல்வீரர்கள் கூட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, தமுமுகவின் (ஹைதர் அலி) ஆதரவாளர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசியில் தமுமுகவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஹைதர் அலி மற்றும் ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் தனித்தனியே செயல்படுகின்றனர். இந்நிலையில், ஹைதர் அலி ஆதரவாளர்கள் சார்பில் மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தை செய்யாறில் நவம்பர் 6-ம் தேதி (நேற்று) நடத்த முடிவு செய்தனர். இதற்கு, ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் காவல்துறையினர் மற்றும் எதிர் தரப்பினரை கண்டித்து ஹைதர் அலி ஆதரவாளர்கள், தமுமுக கொடியை கையில் ஏந்தியபடி, மார்க்கெட் பகுதி அருகே உள்ள புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள், புறவழிச் சாலையை நோக்கி வந்தனர். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சாலை மறியிலில் ஈடுபட்ட ஹைதர் அலி ஆதரவாளர்கள் 179 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், புறவழிச்சாலை நோக்கி வந்த ஜவாஹிருல்லா ஆதரவாளர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள், உண்மையான தமுமுக நாங்கள் தான். எங்கள் அமைப்பின் கொடியை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செய்யாறில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்