கோபி அருகே பெய்த கனமழை காரணமாக தடப்பள்ளி பாசன வாய்க்காலின் கரை உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த இரு நாட்களாக கோபி, கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், வாய்க்கால்களில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கெனவே பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில், வாய்க்கால் கரைகளைத் தொட்டவாறு நீர் சென்றது.
இதனால் கோபி அருகே உள்ள நஞ்சை கோபி பகுதியில் செல்லும் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, அருகே உள்ள வயல் வெளிக்குள் வெள்ள நீர் புகுந்தது. நெல் நடவுக்கு தயாராக இருந்த நிலங்கள் சேறும், சகதியுமாக மாறியது.
சேதமடைந்த வாய்க்கால் மற்றும் வயல்வெளி பகுதியினை கோபி எம்.எல்.ஏ.கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேதமடைந்த வாய்க்காலின் கரைப் பகுதியை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கோபி வட்டாரத்தில் தொடர் மழை பெய்வதால், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago