நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது. கோபியை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 7913 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 103.06 அடியாக இருந்தது. பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தடப்பள்ளி -அரக்கன்கோட்டை, கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும், பவானி ஆற்றில் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணை
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கோபியில் அதிகபட்சமாக 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குன்றி, விளாங்கோம்பை உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நேற்று நிரம்பியது. அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழையால் திம்பம் மழைப்பாதையில் 27-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சரிந்த மண் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மழையளவு விவரம் (மி.மீட்டரில்): கோபி 110, குண்டேரிப்பள்ளம் 102, நம்பியூர் 84,எலந்தைக்குட்டை மேடு 81, அம்மாபேட்டை 66, கவுந்தப்பாடி 46, கொடிவேரி 42, வரட்டுப்பள்ளம் 41, சத்தி 35, பவானி 32 மி.மீ. பதிவானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago