திருச்சியில் தீபாவளியையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில் காற்றின் தரம் திருப்திகரமாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். காற்று மாசுபடுவதை தடுக்க நீதிமன்றங் களும் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, சரவெடிகளால் காற்று மாசு, ஒலி மாசு, திடக்கழிவு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி அவற்றை தயாரிக்கவும், விற்கவும், வெடிக் கவும் மற்றும் பேரியம் ரசாயனத் தால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகை நாளில் அதிகமான வெடிகள் வெடிக்கப்பட்ட நிலையில், அன்று காற்றின் தரம் திருப்திகரமாக இருந்ததாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
திருச்சி துவாக்குடியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.லட்சுமி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது:
வழக்கமாக தீபாவளி பண்டி கைக்கு முந்தைய 7 நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு பிந்தைய 7 நாட்கள் என மொத்தம் 14 நாட்களுக்கு காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். அந்த வகையில், திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் மற்றும் ராமலிங்க நகர் ஆகிய 2 இடங்களில் அக்.28-ம் தேதி முதல் காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
காற்றின் தரக் குறியீடு அளவு 0 முதல் 50-க்குள் இருந்தால் நல்ல நிலையில் உள்ளது என்றும், 51 முதல் 100-க்குள் இருந்தால் திருப்திகரமான நிலையில் உள்ளது என்றும், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான நிலையில் உள்ளது என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமான நிலையில் உள்ளது என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், 401-க்கு மேல் இருந்தால் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் பொருள்படும்.
அதன்படி, திருச்சி நகரில் அக்.28-ம் தேதி முதல் நவ.4-ம் தேதி வரை காந்தி மார்க்கெட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு குறைந்தபட்சம் 48-லிருந்து அதிக பட்சமாக 80 வரையும், ராமலிங்க நகரில் காற்றின் தரக் குறியீடு குறைந்தபட்சம் 32-லிருந்து அதிக பட்சமாக 56 வரையும் இருந்தது.
திருச்சி நகரில் 2 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரம் குறியீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அது திருப்திகரமான நிலையில் உள் ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago