பெரம்பலூர் அருகே தொடர் மழை காரணமாக, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பச்சை மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.
இதனால், மேலப்புலியூர் ஏரிக்கு தண்ணீர் அதிகமாக வந்த நிலையில், வரத்து வாய்க் கால்களில் அதிகளவில் ஆக்கிர மிப்புகள் இருந்தன. இதனால், மேலப்புலியூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், 41 வீடுகளில் மழைநீர் புகுந்ததில் 8 வீடுகள் சேதமடைந்தன.
தகவலறிந்த வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று, பாதிப்புக்குள்ளான 61 பேரை பாதுகாப்பாக மீட்டு, மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கவைத்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகளும், கால்நடை கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
காட்டாற்றில் வெள்ளம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கோரையாறு கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பச்சைமலையில் கோரையாறு அருவி உள்ளது. இங்கு குளிப்பதற்காக திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரு வார்கள்.அதன்படி, திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டி வழியாக நேற்று புதூர் கிராமத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், அங்கிருந்து கோரையாறு அருவிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, காட்டாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
பின்னர், ஒருவரை ஒருவர் கைகோத்தபடி பிடித்துக்கொண்டு, காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து, புதூர் கிராமத்துக்கு வந்து தப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago