புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆர்.ராஜ்கிரண்(30), எஸ்.சுகந்தன்(30), ஏ.சேவியர்(32) ஆகிய 3 பேரும் கடந்த மாதம் 19-ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, தங்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகு மீது மோதியதில் படகு பழுதாகி கடலில் மூழ்கியது. இதில், ராஜ்கிரண் உயிரிழந்தார். சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். 4 நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரணின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடித்து தங்கவைக்கப்பட்டிருந்த சுகந்தன், சேவியர் இருவரையும் விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு இலங்கை அரசு அனுப்பி வைத்தது.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரும் ஊருக்குச் செல்ல பணம் இல்லாததால், விமான நிலையத்தில் இருந்த ஒரு கார் ஓட்டுநரின் செல்போன் மூலம் தங்கள் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ஓட்டுநரின் வங்கிக் கணக்குக்கு சேவியரின் குடும்பத்தினர் அனுப்பிய பணத்தை பெற்றுக்கொண்டு இருவரும் பேருந்து மூலம் ஊருக்கு புறப்பட்டனர். ஆனால், தீபாவளி பண்டிகை காலமாக இருந்ததால், சென்னையில் இருந்து கோட்டைப்பட்டினத்துக்கு நேரடி பேருந்து கிடைக்காததால், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டைக்கு பேருந்தில் சென்றனர்.
அங்கு மீன்வளத் துறை துணை இயக்குநர் சர்மிளா தலைமை யிலான மீன்வளத் துறையினர் மீனவர்கள் 2 பேரையும் வர வேற்று, கார் மூலம் கோட்டைப் பட்டினத்துக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினரிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர். அவர்களை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago