தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை பணியாளரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத்தின் முகாம் அலுவலகம் செயல்டுறது. மாளிகையின் பொறுப்பாளராக நாசர் மகன் சதாம் சேட் (29) என்பவர் பணிபுரிகிறார்.
தீபாவளி அன்று மாலை 6 மணியளவில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன், தனது நண்பர்கள் 5 பேருடன் அரசு சுற்றுலா மாளிகைக்கு காரில் வந்துள்ளார். 6 பேரும் சுற்றுலா மாளிகை வளாகத்தில் வைத்து மது அருந்தியுள்ளனர்.
சதாம் சேட் அவர்களைக் கண்டித்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சதாம் சேட்டை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சதாம் சேட் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பில்லா ஜெகன் மற்றும் 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 7 பிரிவுகளின்கீழ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் பில்லா ஜெகன், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். நடிகர் விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவராகவும் பில்லா ஜெகன் இருக்கிறார். அவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago