திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம் ரத்து : ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம் மற்றும் சுவாமிகள் வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரி வித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையும் மற்றும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். 17-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு தினசரி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். அவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இலவச தரிசனத்துக்கான முன் பதிவு இன்று(6-ம் தேதி) தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் உள்ளூர் பக்தர் களுக்கான அனுமதி சீட்டு, சிறப்பு மையங்கள் மூலம் நேரடியாக வழங்கப்படும். தீபத் திருவிழா நாட்களில் கட்டளைதாரர்கள் மற்றும் உபய தாரர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

கிரிவலம் செல்ல தடை

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் நடைபெறும் சுவாமிகளின் உற்சவம், ஆகம விதி களின்படி கோயில் வளாகத்தில், கடந்தாண்டை போல் இந்தாண்டு நடைபெறும். அதேபோல், மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம், இந்தாண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, கோயில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சுவாமிகளின் உலா நடைபெறும்.

மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய 19-ம் தேதி முதல் 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அய்யங்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும்.

தீபத் திருவிழா நடைபெறும் 17 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை.

சிறப்பு பேருந்து மற்றும் ரயில் இயக்கப்படாது. ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை. பவுர்ணமி மற்றும் மகா தீபத் திருநாள் என 17-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ம் தேதி வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்