கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வேண்டும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த கேத்தாண்டப்பட்டி மற்றும் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த 2 ஆலைகளிலும் நடப்பு ஆண்டுக்கான அரவை தொடங்க எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. இதைக் கண்டித்து ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக கடந்த வாரம் விவசாயிகள் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை உரிய நேரத்தில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 27-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது இப்போராட்டத்துக்கு தீர்வு காணாவிட்டால் தொழிலாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்க இருப்பதாக கூட்டுக் குழுத்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுத் தலைவர் அன்பழகன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "திருப்பத்தூர் அடுத்த கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 280-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு கரும்பு அரவையை தொடங்க ஆலை தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால், அரவையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகம் இதுவரை செய்யாமல் உள்ளது.
நவம்பர் 10-ம் தேதிக்கு மேல் அரவையை தொடங்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இது மட்டுமின்றி கடந்த மே மாதம் முதல் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 6 மாதங்கள் சம்பளம் இல்லாமல் தொழிலாளர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வந்தாலும், நடப்பு ஆண்டு உரிய நேரத்தில் அரவை தொடங்க வேண்டும், நிலுவை சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் போராட்டத்தை நிறுத்த தொழிற்சாலை நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆகவே, தொழிலாளர்களின் தொடர் போராட்டத்துக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago