தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரையின் பாரம்பரிய அடையாளமும், பாண்டிய நாட்டுச் சின்னமுமான மூன்று மீன்கள் நீருற்றில் துள்ளி விளையாடுவது போன்ற பித்தளை உலோகத்தால் அமையப்பெற்ற பிரமாண்டமான சிலையை மதுரை ரயில்வே நிலை யத்தின் முன்பாக தமி ழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 1999-ல் நிறுவியது.
இந்நிலையில், ரயில் நிலையத்தின் முன்பகுதியை அழகுப்படுத்தி, விரிவாக்கம் செய்யும்போது நகர் பேருந்துகள் உள்ளே செல்வதற்கு வசதியாக அச்சிலையை அகற்றினர். அதற்கு பதிலாக வேறு ஒரு பொருத்தமான இடத்தில் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் சிலையை மீண்டும் அமைக்க, அப்போதைய கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.
அதன்பேரில், மீன் சிலை அகற்றப்பட்டு ரயில் நிலையத்திலுள்ள அறை ஒன்றில் பத்திரமாக வைத்திருந்தோம்.
தற்போதைய கோட்ட மேலாளர் அனந்த் பத்பநாபன் ரயில் நிலையத்தின் முன்புறம் தேசியக்கொடி கம்பத்துக்கு அருகில் மீன் சிலையை அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார். அவ்விடத்தில் மீன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நாளை மறுநாள் (நவ. 6) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன், ரயில்வே கோட்ட மேலாளர், வர்த்தக மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago