நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் கேட்டு மாணவன் தாக்கல் செய்த மனுவுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த முப்பிடாதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2020-ல் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றேன். இந்த தேர்வில் 540 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாளின்படி இந்த மதிப்பெண் உறுதியானது. ஆனால், 3 நாட்களுக்கு பிறகு வேறொரு ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன்படி எனக்கு குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால் எனக்கான வாய்ப்பு பறிபோனது. இதனால் பிஎஸ்சி படிப்பில் சேர்ந்தேன்.
கடந்த செப். 12-ல் நடந்த நீட் தேர்விலும் பங்கேற்றேன். தேர்வின்போது தேர்வு அறை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் கைரேகை பதிவு செய்திருந்தேன். அக். 15-ல் ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், எனது கைரேகை இல்லை.
நான் விடையளிக்காத சில வினாக்களுக்கு விடையளிக்கப்பட்டிருந்தது. நீட் விடைத்தாளில் பெருமளவு முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, எனது ஓஎம்ஆர் விடைத்தாளை வழங்கவும், எனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யவும், எனக்காக, ஒரு எம்பிபிஎஸ் சீட் காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்து, தேசிய தேர்வு முகமை, மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago