கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னிமலை முருகன் கோயிலில், இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் இல்லாமல் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோயிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா ஆறு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் விழா நடந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது. நாளை தொடங்கி 10-ம் தேதி வரை 6 நாட்களும் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி பல்வேறு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 6 நாட்களும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ள உள்ளனர்.
ஆண்டுதோறும் கந்த சஷ்டி நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளில் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு கரோனா பரவலால் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கந்த சஷ்டி நிறைவு நாளான 10-ம் தேதி இரவு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இருந்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமியை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது முருக பக்தர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago