திருச்சியில் நன்னடத்தை விதிகளை மீறிய 2 ரவுடிகளுக்கு 350 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக க.கார்த்திகேயன் பொறுப்பேற்றவுடன், மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் ரவுடிகள், பழைய குற்றவாளி களைப் பிடித்து நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தி, இனிமேல் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பிரமாணப் பத்திரம் பெற்றனர்.
இந்நிலையில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்குட்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான ஹரிஹர சுதன், வீரமணி ஆகியோர் தாங்கள் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது கடந்த அக்.27-ம் தேதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இருவரையும் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் துணை ஆணையர் சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, குற்ற செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 350 நாட்களை சிறையில் கழிக்குமாறு நிர்வாக செயல்துறை நடுவரும், துணை ஆணையருமான சக்தி வேல் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ஹரிஹர சுதன், வீரமணி ஆகிய இருவரும் உடனடியாக கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago