அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் ஸ்டாலின் தினமும் தொடர்பு கொண்டு திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார், என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி வழங்கினார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை முதல்வர் ஸ்டாலின் தினமும் தொடர்பு கொண்டு, மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் 85 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன, என்றார்.
தொடர்ந்து வெள்ளாளப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சு.முத்துசாமி, அப்பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதி தேவை என ஆசிரியர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் உடனடியாக தற்காலிக கழிவறை அமைக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர், கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், கோபி ஆர்டிஓ பழனிதேவி, வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago