மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் தாழ்வான இடத்தில் இருந்த வீடுகளில் மழை நீர் புகுந்தது. நேற்று முன்தினம் இப்பகுதியில் 20.01 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மரக்காணம் பகுதியில் கடந்த இரு தினங்களாக நல்ல மழைப் பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் சீரான தொடர் மழைப் பொழிவு இருந்தது. அன்றைய தினம் இப்பகுதியில் 20.01 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக இங்குள்ள கந்தாடு கிராமத்தையொட்டியுள்ள பச்சைபைத்தான் கொள்ளை கிராம குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மரக்காணம் பூமீஈஸ்வரர் கோயில் வளாகத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது. மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியில் வசிக்கும் இருளர் மக்களின் குடிசை வீடுகளும் உடைந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
காணிமேடு மண்டகப்பட்டு கிராமங்களுக்கு இடையில் ஓங்கூர் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்ததில் இத்தரைப்பாலம் மூழ்கியது. வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் இந்தப் பாலம் எந்த நேரத்திலும் உடையும் அபாய நிலை உள்ளது. இதனால் காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ளகொண்ட அகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் சுமார் 15 கி.மீ சுற்றிச் செல்கின்றனர்.
மேலும் இத்தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடந்தாண்டு, ‘ரூ. 9.5 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்’ என்று அப்போதைய அரசு அறிவித்தது. ஆனால் இது வரையில் இங்கு எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இத்தரைப்பாலம் மூழ்கியதை அடுத்து, அப்பகுதியை விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் சிவசேனா ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழையில் 13 வீடுகள் பாதியளவும் ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்ததாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீன்பிடிக்க தடை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தை ஒட்டியுள்ள கடலோர மீனவப் பகுதிகளில் வசிப்பவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்.மீனவ மக்கள் அனைவரும் தங்களுடைய மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். மீனவர்கள் தங்களுடைய பகுதிக்கு அருகாமையில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்புத்துறையினர் முட்டுக்காடு, தாழங்காடு, வசவன்குப்பம், கைப்பணிக்குப்பம், அசப்பூர், வன்னிப்பேர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தொடர்மழை காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து உரிய அறிவுரைகளை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago