தீபாவளி நெரிசலைத் தவிர்க்க ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் :

By செய்திப்பிரிவு

தீபாவளி நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஈரோடு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நாளை (4-ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஈரோடு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வரும் பேருந்துகள், காவிரி சாலை, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை கிருஷ்ணசெட்டி வீதி வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும்.

மணிக்கூண்டு வழியாக பேருந்து நிலையம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பன்னீர் செல்வம் பூங்கா, சவீதா சந்திப்பு, வாசுகி வீதி வழியாகச் செல்ல வேண்டும். கோவை, திருப்பூரில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர் திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் எம்ஜிஆர் சிலை சந்திப்பு வழியாக மேட்டூர் சாலை வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கே.என்.கே. சாலை அரசு நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணா தியேட்டர், சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்களையும், பார்க் ரோடு ஸ்டார் தியேட்டர், சி.எஸ்.ஐ. மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பேருந்துகளில் பட்டாசு மற்றும் வெடி பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. பேருந்துகளை அதன் ஓட்டுநர்கள் உரிய இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்