சேலத்தில் குறைந்த விலையில் தங்கக் காசு வழங்குவதாகக் கூறி நகை சீட்டு நடத்தும் இளைஞரிடம் ரூ.10 லட்சத்தை பறித்த எஸ்எஸ்ஐ உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெரும்பாலை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பழனி (36). நகை ஏலச்சீட்டு நடத்தி வரும் இவரிடம் சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் கிராமுக்கு ரூ.300 குறைத்து தங்கக் காசு தருவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பி பழனி நேற்று முன்தினம் ரூ.10 லட்சத்துடன் காரில் சேலம் ஓமலூர் ஆர்சி செட்டிப்பட்டி பகுதிக்கு வந்தார். அப்போது, பெரியசாமி, அவரது மகன் ஜெகன், மருமகன் பரணிதரன் உள்ளிட்டோர் மற்றொரு காரில் வந்து தங்கக் காசுகளை பழனியிடம் கொடுத்தனர்.
அதை வாங்கி பழனி பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்களை போலீஸ் எனக்கூறி பழனியிடம் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினர். அதே நேரம் பெரியசாமி உள்ளிட்டோர் காரில் தப்பினர்.
சந்தேகம் அடைந்த பழனி, போலீஸ் எனக்கூறிய இருவரில் ஒருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து ஒமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்தார்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்டவர் ஆதிசக்திபுரத்தைச் சேர்ந்த உதயசங்கர் (28) என்பதும் தப்பிச் சென்றவர் எடப்பாடி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (49) என்பதும், அவர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. மேலும், இவர்கள் கூட்டாக மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, தப்பியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்பி அபிநவ் உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் விசாரித்து, பெரியசாமி, ஜெகன், சரவணன், சங்ககிரி பரணிதரன், மணக்காடு விஜயகுமார், உதயசங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் பரணிதரன் வீட்டில் இருந்த காரை சோதனை செய்தபோது, அதில் ரூ.5 லட்சம் கள்ளநோட்டு இருந்தது தெரிந்தது. இவர்கள் கள்ளநோட்டு மோசடியிலும் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago