தமிழ்நாடு என்ற பெயர் எப்போது ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதப் பொருளாகி வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் பல்லவர் சோழர் காலங்களிலேயே வழங்கி வந்துள்ளது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நேற்று கூறியது: சங்கத் தமிழ் நூல்களில் தமிழ்நாடு என்ற பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த சொல் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னனின் முதலமைச்சராகத் திகழ்ந்த சேக்கிழார் பெருமானால் பதிவிடப் பெற்றதாகும். அவர் காலத்தில் பாண்டியநாடு மட்டுமே தமிழ்நாடு என்ற பெயரால் வழங்கி வந்துள்ளது.
1,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தனித்தனியே சோழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்றதைக் கூறும்போது சேக்கிழார் பெருமான், `தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்’ (நாவுக்கரசர் புராணம் – பாடல் எண்.289) என்றும், `வாகீசர் மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்’ (பாடல் எண்- 400) என்றும் கூறியுள்ளதால் பல்லவர், சோழர் ஆட்சிக்காலங்களிலேயே தமிழ்நாடு என்று அழைக்கும் மரபு இருந்தது என்பது உறுதி என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago