நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை நீடிப்பு : 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பலத்த மழை நேற்றும் நீடித்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நேற்று பிற்பகலில் 1 மணி நேரத்துக்கு பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களும் வெள்ளக்காடானது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், பலத்த மழையாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தச்சநல்லூர் , மணிமூர்த்தீஸ்வரம், வண்ணார் பேட்டை தெற்கு புறவழிச்சாலை சிக்னல் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் கடலோர கிராமங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 7 , சேர்வலாறு- 7, மணிமுத்தாறு- 43.8, நம்பியாறு- 22, கொடுமுடியாறு- 7, அம்பாசமுத்திரம்- 43.6 , சேரன்மகாதேவி- 11.4 , ராதாபுரம்- 6.4 , நாங்குநேரி- 17.5, களக்காடு- 9.2, மூலக்கரைப்பட்டி- 8, பாளையங்கோட்டை- 10 , திருநெல்வேலி- 11.2 .

பாபநாசம் அணை நீர்மட்டம் 135.35 அடியாக இருந்தது. அணைக்கு 1,225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 1,034 கனஅடி திறந்துவிடப்பட்டிருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை அடவிநயினார் அணையில் 15 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 12 மி.மீ., தென்காசியில் 11.40 மி.மீ., ஆய்க்குடி, சிவகிரியில் தலா 7 மி.மீ., கருப்பாநதி அணை, குண்டாறு அணை, சங்கரன்கோவிலில் தலா 4 மி.மீ., செங்கோட்டையில் 3 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. ராமநதி அணை நீர்மட்டம் 75.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 128 அடியாகவும் இருந்தது. நேற்று பகலிலும் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

குமரியில் மீண்டும் கனமழை

வடகிழக்கு பருவமழை குமரி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் அணைகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் மழை நின்று வெயிலடித்தது. இதனால் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. மாம்பழத்துறையாறில் 31 மி.மீ., ஆனைக்கிடங்கில் 23 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,127 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 42.92 அடியாக உள்ளது. உபரியாக 1,635 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 72.36 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 701 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,572 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 3,207 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

மாவட்டத்தில் மழைக்கு நேற்று 7 வீடுகள் இடிந்து சேதமாயின. சூறைக்காற்று வீசாததால் பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, பொய்கை, மாம்பழத்துறையாறு அணைகள் நிரம்பி வழிவதால் பொதுப்பணித்துறையினர் அணைகளை கண்காணித்து வருகின்றனர். வெள்ளஅபாய எச்சரிக்கை பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்