நாமக்கல் மாவட்டத்தில் 1,365 பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு இனிப்பு, பேனா, பென்சில் உள்ளிட்ட பரிசுகள் கொடுத்து வரவேற்பு :

தமிழகம் முழுவதும் நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,365 பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

மாணவ, மாணவியரை வரவேற்கும் வகையில் பள்ளிகளில அலங்கார தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டன. இதையடுத்து நேற்று காலை பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவியருக்கு பூங்கொத்து, பலூன் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பென்சில், நோட்டுப்புத்தகம், பலூன், பொம்மைகள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ராமன், முன்னாள் எம்.பி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE