மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - சேலத்தில் கட்டப்பட்டுள்ள தேர்தல் ஆணைய புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் :

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.

தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ.6.69 கோடியில் சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் 3 மாடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு அறைகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் புதிய கட்டிடத்துக்கு நேற்று இடம் மாற்றம் செய்யப்பட்டன. புதிய கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தடையின்றி மின்சாரம் கிடைக்க வசதியாக ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் கூடிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை தேர்தல் ஆணைய அனுமதி கிடைத்தவுடன், புதிய கட்டிடத்துக்கு கொண்டு வரப்படும். மேலும், இருப்பில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், 139 எம்-2 மாடல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,518 எம்-3 மாடல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 150 விவிபேட் இயந்திரங்கள், 46 பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், 57 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்