சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளில் 93.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டது. இப்பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 01.01.2022-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி இன்று (நேற்று) முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரை வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இணைதளம் மூலம் www.nvsp.in என்ற முகவரியிலும், Voter Helpline என்ற செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.
வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வரும் 13, 14, 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் ஆட்சியர் கார்மேகம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதியில் 15,00,529 ஆண் வாக்காளர்கள், 15,16,874 பெண் வாக்காளர்கள், 200 இதர வாக்காளர்கள் என மொத்தம் 30,17,603 வாக்காளர்கள் உள்ளனர், என்றார்.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில் 14.46 லட்சம் பேர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 14,46 ,106 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,604 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர், 2,391 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
ஈரோட்டில் 19.66 லட்சம் பேர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி நேற்று வெளியிட்டார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 9,57,515 ஆண் வாக்காளர்களும், 10,08,913 பெண் வாக்காளர்களும், 118 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 281 முன்னாள் படை வீரர்கள் என மொத்தம் 19,66,827 வாக்காளர்கள் உள்ளனர்.ஈரோடு மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 2,94,599 பேரும், அந்தியூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 2,20,096 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்ட அளவில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும், 51, 398 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
தருமபுரியில் 12.62 லட்சம் பேர்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 தொகுதிகளிலும் மொத்தம் 12,62,446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 6,37,824 ஆண்கள், 6,24,450 பெண்கள், 172 பேர் இதரர்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியரும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான மருத்துவர் வைத்திநாதன், தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, அரூர் கோட்டாட்சியர் முத்தையன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுகுமார், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
16 லட்சத்து 7281 வாக்காளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டார். ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளில் 8,08,781 ஆண் வாக்காளர்கள், 7,98,220 பெண் வாக்காளர்கள், 280 இதரர் உட்பட 16,07,281 வாக்காளர்கள் உள்ளனர். புதியதாக 2001 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்வில் டிஆர்ஓ., ராஜேஸ்வரி, வருவாய் கேட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி சதீஸ்குமார், ஓசூர் தேன்மொழி, தேர்தல் வட்டாட்சியர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago