9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு :

By செய்திப்பிரிவு

19 மாத இடைவெளிக்குப் பின்னர் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், மலர் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 1 முதல் 8-வது வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 1,110 தொடக்கப் பள்ளிகள், 366 நடுநிலைப் பள்ளிகள், 136 உயர்நிலைப் பள்ளிகள், 159 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,771 அரசுப் பள்ளிகளும், 98 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 25 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.

மாணவர்களை வரவேற்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளி நுழைவாயிலில் வாழைமரம், பலூன்கள் உள்ளிட்ட தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

மேலும், அந்தந்த பகுதி ஊராட்சித் தலைவர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர் கொடுத்தும், மலர் கிரீடம், மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கி வரவேற்றனர். வகுப்பறையில் பாடல், நடனம், கதை, ஓவியம் என புத்தாக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சேலம் மணக்காடு மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆட்சியர் கார்மேகம் வரவேற்று வாழ்த்தினார். பின்னர் பள்ளிகளில் கரோனா தடுப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, எம்எல்ஏ ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குநர் அளவில் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தினசரி பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்வர். சேலம் மாவட்டத்தில் 20 பள்ளிகளுக்கு ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிகளை கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்