கல்லணை கொள்ளிடம் மேம்பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.90.96 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் திருச்சி மற்றும் கும்பகோணத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் திருவையாறு, சுவாமிமலை மற்றும் பாபநாசம் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பாலத்தில் தற்போது சிறு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களும் செல்வதற்கு அனுமதித்தால் நெல், காய்கறிகளை பல்வேறு ஊர்களுக்கு விரைவில் கொண்டு செல்ல முடியும். எனவே, கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் கனரக வாகனங்கள், நகரப் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச. 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago