தோட்டக்கலைப் பயிர்களை - மழைக்காலத்தில் காக்கும் வழிமுறை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில், காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி, நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்து, உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். மழைக் காலத்தில் நோய்த் தடுப்பு மருந்துகள் தூர்களில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகளைக்கொண்டு நன்கு கட்ட வேண்டும்.

வாழை உள்ளிட்ட வருடாந்திர பயிர்கள் காற்றால் பாதிக்காமல் இருக்க கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். உரிய வடிகால் வசதி செய்து, வாழைத்தார்களை முறையாக மூடி வைத்து 75 சதவீதம் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.

இதர தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் கேரட் போன்ற பயிர்களுக்கும், நீர் வடியும் பொருட்டு உரிய வடிகால் வசதி செய்து, நீர்ப்பாசனம், உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்