திருநீறு அணிய பள்ளியில் தடையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் அச்சங்குன்றம் மக்கள் புகார்

பங்களாச் சுரண்டை அரசு உதவி பெறும் பள்ளியில், திருநீறு அணிய தடை விதிக்கப்படுவதைக் கண்டித்து, தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன் ஊர்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 263 மனுக்கள் பெறப்பட்டன.

அச்சன்புதூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் சுடலை அளித்துள்ள மனுவில், ‘கல்விக் கடன் பெற்ற மாணவ, மாணவிகள் பலர் கல்வியை முடித்து வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். கடனை வசூலிக்க வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக்கடனை அரசே செலுத்தும் என்று அறிவித்தது. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். அதுவரை வங்கிகள் நெருக்கடி கொடுப்பதைத் தடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பள்ளியில் மத பாகுபாடு

அச்சங்குங்குன்றத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலைவாணி என்ற மாணவி அளித்த மனுவில், ‘பங்களா சுரண்டையில் கிறிஸ்தவ நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறேன். திருநீறு அணிந்து பள்ளிக்குச் சென்றேன். திருநீறை அழிக்கக் கூறி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினர். இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பாதை ஆக்கிரமிப்பு

புளியங்குடி அருகே உள்ள அச்சந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னப்பன் அளித்துள்ள மனுவில், ‘அச்சந்தி பகுதியில் விவசாய நிலத்துக்குச் செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சிவகிரி அருகே உள்ள ரத்தினபுரியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சின்னப்பன் என்பவர் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் சுடுகாட்டுக்கும், விவசாய நிலத்துக்கும் செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சமுத்திரராஜ் என்பவர் அளித்துள்ள மனுவில், ‘கணக்கப்பிள்ளைவலசை 6-வது வார்டு கீழத் தெருவில் அரசுக்கு சொந்தமான பாதையை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலகரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்த மாணவர்கள் ராம் சூர்யா, பரத் நிமலன், ரினோ ஆகியோர் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தனியாக செல்ல அச்சமாக உள்ளது. தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE