கோவை, திருப்பூரில் களைகட்டிய தீபாவளி விற்பனை : புத்தாடைகள், பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள் வாங்கவும், இதர பொருட்கள் வாங்கவும் விடுமுறை தினமான நேற்று, கடைவீதிகளில் மக்கள் திரண்டனர்.

கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, டவுன்ஹால், காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் திரண்டனர்.

கடைவீதிகளுக்குள்ளேயே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது. பல இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. மக்கள் ஆர்வமாக வந்து பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். மாநகரில் உள்ள அனைத்து பலகார கடைகளிலும் ஆர்டரின் பேரில் பல்வேறு வகையான இனிப்பு வகைகள், மிக்சர் உள்ளிட்ட கார வகைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. பலகார கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தால் கோவையில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் ஆகிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணித்தனர். மேலும், பொதுமக்கள் முககவசம் அணியவும், தாங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.

மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியதால் கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களிலும், திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளி லும் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் மற்றும் தள்ளுபடி விலையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு குடும்பத்துடன் பொதுமக்கள் நேற்று சென்றனர்.

திருப்பூர் ரயில்நிலையம் அருகேயுள்ள காதர்பேட்டை பகுதியில் பின்னலாடை ரகங்களின் விற்பனை களை கட்டியது. தற்காலிக கடைகளிலும் விற்பனை தீவிரமாக இருந்தது. தவிர, புதுமார்க்கெட் வீதி, குமரன் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, மங்கலம் சாலையில் உள்ள பிரபல துணிக்கடைகள், இனிப்புகடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில் வர்த்தகம் மும்முரமாக நடைபெற்றது.

பொருட்கள் வாங்க பலரும் தங்களது கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வந்ததால் திருப்பூரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்