ஏற்காடு ஏரியில் ரூ.15 லட்சம் செலவில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம் :

ஏற்காடு ஏரியில் ரூ.15 லட்சம் செலவில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஆண்டு முழுவதும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இங்குள்ள ஏரி மலை முகடுகளுக்கு நடுவே இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர்.

ஏற்காடு ஏரியில் படகு சவாரியை மேம்படுத்த சுற்றுலாத் துறை சார்பில் புதிய படகுகள், படகுகள் நிற்கும் படகுத்துறையின் கட்டுமானங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும், பயணிகள் ஏரியில் தடையின்றி படகு சவாரி செய்ய ஏரியில் ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டன.

ஆனாலும் ஏரியில் புதர்போல ஆகாயத்தாமரை செடிகள் மீண்டும் வளர்ந்திருந்தன. இதனால், ஏரி நீர் மாசடையும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சுமார் 17 ஏக்கரில் உள்ள ஏரியில் ரூ.15 லட்சம் செலவில் ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏரி அதிக பரப்பு கொண்டிருப்பதாலும், ஆழமான இடங்களில் தொழிலாளர்கள் மூலம் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவது சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ‘ட்ரெட்ஜர்’ எனப்படும் மிதவையில் பொக்லைன் இயந்திரத்தைப் பொருத்தி ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்காடு படகுத்துறை மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

ஏற்காடு ஏரியில், ‘ட்ரெட்ஜர்’ மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் ஏற்காட்டில் அடிக்கடி கனமழை பெய்ததால், ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது, மழை குறைந்துள்ளதால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்குள்பணிகளை முடிக்கும் வகையில்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்