ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று முதல் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
பின்னர் கரோனாவின் தாக்கல் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, ஜூலை 5 முதல் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கும், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடவும் மட்டமே அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்ககப்படவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தடை கடந்த அக்.15-ம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று (நவ.1) முதல் 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று ராமேசுவரம் கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி முதல் 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடலாம்.
ராமேசுவரம் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருவர். 22 தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்காததால் கடந்த சில மாதங்களில் வெளிமாநில பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்திருந்தது. தற்போது தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் இனிவரும் காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago