சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிவதாபுரத்தில் நடைபெற்று வரும் ஏரி உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சேலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி ஏரி, சிவதாபுரம் ஏரி, அரியாகவுண்டம்பட்டி ஏரி, வேடுகாத்தான்பட்டி ஏரி, திருமலைகிரி ஏரி ஆகியவை மழை காலத்தில் நிரம்பும்போது உபரிநீர் வெளியேறி சிவதாபுரம் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, ஏரிகளின் உபரிநீரானது, இந்திரா நகர், சித்தர்கோவில் மெயின்ரோடு, அம்மன் நகர், எம்ஜிஆர் நகர், மெய்யப்பன் தெரு, மலங்காட்டான் தெரு, செஞ்சிகோட்டை ஆகிய பகுதிகளின் வழியாக திருமணிமுத்தாற்றில் சேரும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்குள் மழைநீர் செல்வதை தடுக்க மைதானம் முழுவதும் மண் கொட்டி, நிலமட்டத்தை உயர்த்தும் வழிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோரிடம் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, போடிநாயக்கன்பட்டி ஏரியைப் பார்வையிட்ட ஆட்சியரிடம், ‘ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி ஏரியை சீரமைக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வின்போது, சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி, சூரமங்கலம் உதவி ஆணையர் (பொ) செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago