மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் பள்ளிகள் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டன. இன்று (நவ.1) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளி வகுப்புகள் தொடங்கவுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப் பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப் பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 1,854 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி வளாகங்களை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 89,362 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 2,10,638 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிக்கு சென்றனர். பின்னர் கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் படிப்பை தொடர்ந்து வந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்ல உள்ளனர். இதனால் பள்ளிகளில் ஆடல் பாடல், பாட்டு போட்டி, கதை கூறுதல் போன்ற கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தி யுள்ளார். அதன்படி பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள், சால்வைகள் அணிவித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. 

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள், சால்வைகள் கொடுத்து வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்