குழந்தைகளை வரவேற்க தயாராகும் தொடக்கப் பள்ளிகள் :

பள்ளிகள் நாளை (நவ.1) திறக்கப்படுவதைத் தொடர்ந்து,மாவட்டத்தில் உள்ள பள்ளி வகுப்பறைகளை தூய்மைப் படுத்தும் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தநிலையில், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டன.

ஆன்லைன் மூலம் மாணவர் களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. தொற்று குறைந்து வந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டமாக 9,10, 11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கான வகுப்புகளுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர்தொட்டி மற்றும் மைதானங்களை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மாணவர்கள் அமரும் இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "பள்ளிகள் திறப்பது தொடர்பான முன்னேற்பாடுகளை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 2,064 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

அந்த பள்ளிகளில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 365 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், பாடத் திட்டங்களுக்கு பதிலாக நன்னெறிக் கதைகள் மற்றும் பொது கருத்துகள் சார்ந்த வகுப்புகள் முதலில் நடத்தப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்