தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் - பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள் :

By செய்திப்பிரிவு

தீபாவளி கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியதால், விடுமுறை நாளான நேற்று ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தள்ளுபடி விலையில் ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், சேலத்தில் நேற்று முக்கிய கடை வீதி உள்ள சாலைகள், பேருந்து நிலையங்கள், மாவட்டத்தில் இதர நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், நேற்று காலை முதல் வணிக நிறுவனங்கள் பரபரப்பாக இருந்தது.

அதே நேரம் விடுமுறை நாளான நேற்று மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான ஏற்காடு, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால், விடுமுறை நாட்களில் இருக்கும் நெரிசல் மற்றும் பரபரப்பின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:

தீபாவளிக்கு முந்தைய வார விடுமுறை நாள் என்பதால், ஏற்காட்டுக்கு பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். குறிப்பாக, மாவட்டம் முழுவதும் மழை ஏதுமின்றி இதமான குளிர் நிலவியது. எனவே, பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று நம்பிக்கை இருந்தது.

கடந்த இரு வாரங்களாக மிதமாக இருந்த பயணிகள் வருகை நேற்று குறைந்தது. ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், காட்சிமுனைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

பயணிகள் வருகை அதிகம் இருந்தால் விற்பனை அதிகரித்து தீபாவளிக்கு தேவையான வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி சூழல் சுற்றுலாத் தலம் கடந்த வாரம் மூடப்பட்ட நிலையில், தற்போது வரை திறக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE