முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் நபார்டு வங்கி உயர் அலுவலர்கள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் நபார்டு வங்கி உயர் அலுவலர்கள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி ரூ.387.60 கோடியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது. 92 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கரைகளின் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணி, சிமென்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கும் பணி, முக்கொம்பு மேலணை முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை கொள்ளிட கரையைப் பலப்படுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பி.ரகுநாத் தலைமையில், துணை மற்றும் உதவிப் பொது மேலாளர், மேலாளர்கள், மாவட்ட வளர்ச்சி மேலாளர்கள் என 26 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நபார்டு வங்கி அலுவலர்களுக்கு பணியின் தற்போதைய நிலை மற்றும் நிறைவடைந்த பணி விவரங்கள் ஆகியவை குறித்து வரைபடம் மற்றும் புகைப்படக் காட்சி மூலம் விளக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆர்.திருவேட்டைசெல்லம், எம்.சுப்பிரமணியன், அன்பரசன், செயற்பொறியாளர் ஆர்.கீதா, உதவிச் செயற்பொறியாளர் கே.ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறும்போது, “மழை காரணமாக பணிகளில் லேசான தாமதம் நேரிட்டுள்ளது. 2 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிந்துவிடும். ஆய்வுக்கு வந்த நபார்டு வங்கி அலுவலர்கள், முழு திருப்தியை வெளிப்படுத்தினர்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்