கோவை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சீரநாயக்கன்பாளையத்திலும், உக்கடத்திலும் ‘கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள்’ செயல்பட்டுவந்தன. இந்த மையங்களில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மூலம் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உக்கடத்திலுள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மூடப்பட்டது. இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகியது. தற்போது மாநகரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் சாலைகளில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, தினசரி கோவை அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே 50 சென்ட் பரப்பளவில், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், ஒண்டிப்புதூர் கருத்தடை மையம் கடந்த இரு வாரங்களுக்கு முன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு, நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை 145 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தவிர, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள கருத்தடை அறுவைசிகிச்சை மையம் மூலமாக, நடப்பாண்டு 1236 தெரு நாய்களுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இரு வேறு தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு உரிய கட்டணத்தை மாநகராட்சி வழங்கும். ஒண்டிப்புதூர் மையத்தில் தொடர்ந்து கருத்தடை அறுவைசிகிச்சை நடைபெறும்” என்றனர்.
வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநர் செந்தில்நாதனிடம் கேட்டபோது, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு தெரு நாய்கள் அவை வசித்த இடத்திலேயே கொண்டு சென்று விடப்படுகின்றன” என்றார்.
பெண் காவலர் உட்பட 11 பாதிப்பு
கோவை மாவட்டம் அன்னூர் பயணியர் மாளிகை முன் நேற்று முன்தினம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பெண் காவலர் பொன்மணி ஈடுபட்டிருந்தார். அப்போது, தெரு நாய் ஒன்று, பொன்மணி உள்பட 11 பேரைக் கடித்து காயப்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களால் கோவையின் புறநகர் பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தெரு நாய் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago