விவசாயிகள் பயன்பெறும் வகையில் - சூரிய சக்தி மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம் : சேலத்தில் நவ., 18-ம் தேதி நடக்கிறது

‘சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறத்தக்க “சூரிய சக்தியில் மின் உற்பத்தி” குறித்த கருத்தரங்கம் நவம்பர் மாதம் 18-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசியது:

கரோனா தொற்று பரவல் காரணமாகவும் நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாகவும், கடந்த சில காலங்களாக காணொலிக்காட்சியின் மூலம் விவசாயிகளின் குறைகள் கேட்டறியப்பட்டது. தற்போது மீண்டும் நேரடியாக இக்கூட்டம் நடைபெற தொடங்கியுள்ளது. வேளாண் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் விதை போன்ற இடுபொருட்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண் துறையில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் விருப்பப்படும் விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் டீசல் மூலம் தண்ணீரை இறைக்கும் பம்புகள் அனைத்தையும் சூரிய மின் சக்தி மூலம் இயங்கும் பம்புகளாக மாற்றிக்கொள்ளலாம். சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறத்தக்க “சூரிய சக்தியில் மின் உற்பத்தி” குறித்த கருத்தரங்கம் நவம்பர் மாதம் 18-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்று மண் மாதிரியினை சேகரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசின் திட்டங்களை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை முறை சாகுபடி செய்யக்கூடிய 5 விவசாயிகள் மற்றும் 2 விவசாயக் குழுக்களுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, இணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்