சேலம் மாநகராட்சிப் பகுதியில் - முதல் தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பரிசு : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்,’ என மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி 7-வது பெருமுகாம் இன்று (30-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 50,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வீட்டில் மாநகராட்சி சார்பாக ‘எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்ற ஸ்டிக்கர் வழங்கப்பட்டு வீடுகளில் ஒட்டப்படுகிறது.

முகாமில் கலந்து கொண்டு முதல் தவணை செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 10 பயனாளிகளுக்கு மாநகராட்சி சார்பாக சிறப்பு பரிசும், அதிக தடுப்பூசி பயனாளிகளை கண்டறிந்து முகாமிற்கு அழைத்து வரும் களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 பேர்களுக்கு சிறப்பு பரிசும் வரும் 1-ம் தேதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்