மழைக்காலம் தொடங்கியுள்ளதால் - மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட வேண்டும் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மழைக்காலம் தொடங்குவதால் மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும், என ஈரோட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியதாவது:

பவானிசாகர் அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 20 கனஅடி நீர் திறந்தால் போதுமானது. ஆனால், 200 கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது. இதனால் அனுமதியற்ற பாசனப்பகுதிகள், தொழிற்சாலைகள் போன்றவை சட்டவிரோதமாக நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன. எனவே, குடிநீர் திட்டத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைக் குறைப்பதோடு, அதனைக் குழாய்கள் மூலம் வழங்கினால் நீர் திருட்டு தடுக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் முறையை எளிமையாக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் கோமாரி தடுப்பூசி போட வேண்டும். தாளவாடியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீர்படுத்த வேண்டும்.

பெருந்துறை வட்டத்தில் அரசின் உரிம காலம் முடிந்தபின்பும் இயங்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் பயிரில் இலை கருகல் நோய் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி பகுதியில் உள்ள 36 நெல் கொள்முதல் நிலையங்களும், அரசின் நேரடி இடத்தில் பாதுகாப்பாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

விஏஓ-க்களுக்கு அறிவுறுத்தல்

கோரிக்கைகளுக்கு விளக்கமளித்து, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் கூறியதாவது:

வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறும்போது அடங்கல் நகல் கேட்கின்றனர். ஜமாபந்தி முடிந்த ஆண்டுக்கான அடங்கல் விவரத்தை மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்கள் தர முடியும். இருப்பினும் விவசாயிகள் நலன் கருதி அடங்கலில் கடந்தாண்டு பயிர் செய்த விவரம், நடப்பு பருவத்தில் அந்த நிலத்தில் நடவு செய்துள்ள பயிர் விவரத்தை தனியாக குறித்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏற்று கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் செய்வோர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும்போது செயற்கை உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது.

ஆப்பக்கூடல் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.41 கோடி நிலுவை வைத்துள்ளது. நிலுவைத்தொகையை அவர்கள் செலுத்தியபின்பு கரும்பு வெட்ட ஆலைக்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்