கடலூர் மஞ்சக்குப்பத்தில் அனைத்து வங்கிகளும் இணைந்து மாபெரும் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமை நடத்தியது. இதனை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் 1,248 பயனாளிகளுக்கு ரூ.69.78 கோடி கடன் தொகை வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிராமப்புற கிளைகளில் உள்ள 698 பயனாளிகளுக்கு ரூ.36.56 கோடி வங்கி மூலமாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
மொத்தம் 1,946 பயனாளி களுக்கு ரூ.106.34 கோடி வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேசிய ஆட்சியர் கூறுகையில், “மத்திய அரசுநிதித்துறை அமைச் சகத்தின் கீழ் இயங்கும் வங்கி சேவைகள் துறையின் வழிகாட்டுதலின்படி இந்த வங்கிகள் - வாடிக்கையாளர்கள் இணைந்த வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் முன்னோடிவங்கியான இந்தியன் வங்கி அனைத்து வங்கிகளுடன் இணைந்து மாபெரும் வாடிக்கை யாளர்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பதை வங்கியாளர்கள் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாய கடன், சிறுகுறு தொழில் கடன், கல்விக் கடன், சுயஉதவிக்குழு கடன், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், சாலையோர வியாபாரி கடன், விவசாய கடன் அட்டை, உணவு பொருள் பதப்படுத்தும் கடன் ஆகிய பிரிவுகளில் கடன் வழங்க வேண்டும்.
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான அளவு வங்கிகள் கடன்களை வழங்க வேண்டும், நமது வங்கியாளர்கள் மாணவர்களின் கல்விக் கடனுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நமது மாவட்டத்தில் அடுத்த தலைமுறையினர் கல்வியில் சிறந்த வளர்ச்சி பெறவும், சமுதாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். கரோனா காலத்தில் நலிவுற்ற சிறு மற்றும் குறு தொழில்களுக்கு புத்துணர்வு பெறும் வகையில் மறு கடன் மற்றும் கூடுதல் கடன்கள் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக அனைத்து வங்கிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கடன் திட்டங்கள், மின்னணு பணபரிமாற்றம், அரசு துறை திட்டங்கள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இயக்கப்படும் திட்டங்கள், சுயஉதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் மற்றும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்ததை ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி, இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் ஜெ.ரவிச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிராந்திய மேலாளர் ரமேஷ், பாரத ஸ்டேட் வங்கி பிராந்திய மேலாளர் ஹேமா, கனரா வங்கி மண்டல மேலாளர் ராவ், தமிழ்நாடு கிராம வங்கி பிராந்திய மேலாளர் ஆல்வின் மற்றும் அனைத்து வங்கிகளின் உயர் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் ரூ.183 கோடிக்கு கடனுதவி
விழுப்புரத்தில் அனைத்து வங்கிகளின் சார்பாக வாடிக்கை யாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது.அனைத்து வங்கிகளின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொடர்பு முகாம் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி நேற்று விழுப்புரத்தில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 2,479 பயனாளிகளுக்கு ரூ.183 கோடி கடனுதவிக்கான அனுமதிகடிதங்களை ஆட்சியர் வழங்கினார். அப்போது அவர் கூறியது:
விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் பொதுத்துறை வங்கிகள், தாட் கோ மற்றும் பிரதம மந்திரி வேலை உருவாக்கும் திட்டம் போன்ற துறைகளின் சார்பாக கண்காட்சிகள் அமைக்கப்பட்டன. இக்கண்காட்சியில் வீட்டுக் கடன், தொழிற்கடன், விவசாயக்கடன், நகை கடன், வேளாண்இடுபொருட்கள் வாங்குவதற்கான கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுவது குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கடனுதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக கடனுதவிகளும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார். முன்னதாக அனைத்து வங்கிகள் சார்பாக வைக்கப்பட்ட காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago