மதுரையில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீஸாரால் திடீர் வேகத்தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வருவோர் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை நகரில் விபத்துகளை தடுக்க காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் சாலைகள் மற்றும் சந்திப்பு, ரவுண்டானாக்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் மாநில நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாக ஒப்புதலுடன் போக்குவரத்து போலீஸார் வேகத்தடைகளை ஏற்படுத்துகின்றனர்.
போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் மேற்பார்வையில், தல்லாகுளம் போக்குவரத்து போலீஸார் கே.கே. நகர் ரவுண்டானாவில் மேலூர் சாலை, நீதிமன்றச் சாலை, கே.கே.நகர் சாலைகளில் இருந்து ரவுண்டானாவை கடக்கும்போது, நெருக்கடி மற்றும் விபத்துகளைத் தடுக்க மேற்கண்ட 3 சாலைகளிலும் வேகத்தடைகளை ஏற்படுத்தி, வெள்ளை நிறக் கோடுகளை வரைந்துள்ளனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளை அருகே உள்பட சில சாலைகளில் வேகத் தடைகள் அமைத்தும், முன்எச்சரிக்கை வெள்ளை நிற அடையாள கோடுகளை வரையாததால் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருவோர் தூக்கி வீசப்பட்டு விபத்தில் காயமடைகின்றனர்.
நேற்று பிற்பகல் உயர் நீதிமன்றக் கிளை அருகே திடீர் வேகத் தடையால் விபத்தில் சிக்கிய நபர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், விபத்துகளை தடுக்க வேகத் தடைகளை அமைப்பது அவசியம்தான். ஆனால், இரவு பகலை அடையாளப்படுத்தும் விதமாக முன் எச்சரிக்கை போர்டு, சிவப்பு நிற எதிரொலிப்பான்கள், வெள்ளை நிறக் கோடுகளை வரைய வேண்டும். மேலும் வேகத் தடைகளை குன்று போல அமைக்காமல் எளிதில் கடக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago