நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு, முறைகேடு புகார் - 2 ஊராட்சித் தலைவர்களின் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து : திருச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு, முறைகேடு புகார்களால் 2 ஊராட்சி மன்றத் தலைவர்களின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாவித்திரி. பிச்சாண்டார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சோபனா. ஆனால், இந்த இரு ஊராட்சி மன்றத்தின் அனைத்து நிர்வாகங்களிலும் அவர்களது கணவர்களின் தலையீடுகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

மேலும், தீராம்பாளையம் ஊராட்சியில் ரூ.6.70 லட்சம் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டது. அதேபோல, பிச்சாண்டார்கோவில் ஊராட்சி முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இரு ஊராட்சி மன்றத் தலைவர்களின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தையும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதேபோல, முறைகேடு புகார் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவர் கிருத்திகா, துணைத் தலைவர் மணிமேகலை ஆகியோரது கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்