4.22 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு - ரூ.329 கோடி நிலுவை தொகை வழங்கும் பணி தொடக்கம் : அமைச்சர்கள் கே.என்.நேரு, நாசர், சிவசங்கர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

பால் உற்பத்தியாளர்கள் 4.22 லட்சம் பேருக்கு, ரூ.329 கோடி நிலுவை தொகை வழங்கும் பணி தொடங்கியது. திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, நாசர், சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் விழா, ஆவின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் விழா, கால்நடை வளர்ப்போருக்கு குரல் ஒலி குறுஞ்செய்தி வழியாக ஆலோசனை வழங்கும் திட்ட தொடக்க விழா ஆகியவை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய (ஆவின்) நிர்வாக இயக்குநர் சு.கந்தசாமி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய (ஆவின்) பொது மேலாளர் ரா.அபிராமி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பேசும் போது, ‘‘பால் உற்பத்தியாளர் கள் நலன் கருதி 4.22 லட்சம் பேருக்கு ரூ.329 கோடி நிலுவைத் தொகை வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 12 சங்கங்களுக்கு ரூ.81.33 லட்சம் வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பே அனைவருக்கும் இந்த தொகை வழங்கப்பட்டுவிடும். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த 4,482 பணியாளர்களுக்கு ரூ.3.06 கோடி போனஸ் வழங்கப் படுகிறது. இதன் தொடக்கமாக திருச்சியைச் சேர்ந்த 25 பேருக்கு தலா ரூ.8,400 வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, ‘‘தனியார் நிறுவனங்கள் ஆவினுக்கு கடும் போட்டியாக திகழ்கின்றன. எனவே பால் கொள்முதல் விலையைக் கூட்டி, விற்பனை விலையை குறைக்கும் நடைமுறையை அரசு மேற்கொண்டு வருகிறது. விவசா யிகளின் வருமான பெருக்கத்துக்கு வழிவகுக்க கூடியதாக ஆவின் விளங்குகிறது. திருச்சி மாவட்டத் தில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் நிறுவனத்துக்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’’ என்றார்.

இவ்விழாவில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திருச்சி ஆவின் நிறுவன துணைப் பொதுமேலாளர் கே.நந்தகோபால், எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, செ.ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்